படுக்கை வசதி, குளியலறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் மற்றும்  ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் இல்லம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பினை பெற்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பியூரின் என்ற நிறுவனம் உயர் வகை மோட்டார் இல்லத்தை தயாரித்துள்ளது. எலிசியம் என்ற பெயரில் இந்த மோட்டார் இல்லத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் இல்லம் 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சில சொகுசு தொடர்மாடி குடியிருப்பு வீடுகளில் இருப்பதைவிட அதிக வசதிகளை கொண்டுள்ளதாக இந்த மோட்டார் இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் இல்லத்தின் மேற்கூரையில் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளமை பலரையும் கவர்ந்துள்ளது. மேலும், இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்ட ராபின்சன் ஆர்22 ஹெலிகொப்டரும் இந்த மோட்டார் இல்லத்திற்காக வாங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது பயணிகள் பயன்படுத்தக் கொள்ளலாம்
மோட்டார் இல்லத்தின் உள்பகுதி மிக சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. அத்துடன், ஓய்வாக அமர்வதற்கான பெரிய அளவிலான இருக்கை, 75 இன்ச் திரையுடன் கூடிய எல்இடி தொலைகாட்சி பொருத்தப்பட்டு இருக்கிறது. குறித்த தொலைகாட்சி மிக மோசமான வானிலையிலும் மிகவும் துல்லியமாக இயங்குமாம்.
குறித்த மோட்டார் இல்லத்தில் அனைத்தும் தொடுஉணர்வு கட்டுப்பாட்டு ஆளிகள் கொண்டதாக இருக்கிறது. வாகனத்தை இயக்குவது கூட மிக எளிதானது என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அனைத்து வசதிகளையும் சாரதியின் இருக்கை அருகேயுள்ள தொடுதிரை சாதனத்தின் மூலமாக கட்டுப்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் பின்புறத்தில் படுக்கையறை  இரண்டு பேர் தங்குவதற்கான மிக சொகுசான படுக்கை வசதியுடன் இந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது.
மரத்தாலான மாடிப்படிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாடியில் சுடுநீர் குளியலிற்காக பெரிய நீர் தொட்டி, ஓய்வாக அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இறங்குதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளுடன் கூடிய இந்த மோட்டார் இல்லம் 2.5  மில்லியக்  அமெரிக்க டொலர் மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த மோட்டார் இல்லத்தை விற்பனை செய்யப்போவதில்லை.
தங்களது தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் பிரபலப்படுத்தும் நோக்கில் தயாரித்துள்ளதாகவும் பியூரின் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.