மொட்டைமாடியில் நின்றுகொண்டு வானத்தைப் பராக்குப்பார்த்துக் கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை தீர்ந்து போயிருந்தது. ஞாயிறு மட்டும் எப்போதும் கூடுதல் அமைதியானதாகவும், கொஞ்சம் கனம் மிகுந்ததாகவுமே அமைந்து விடுகின்றது. விடியல் திங்கள் என்பதாலும், வாரத்தின் துவக்கம் என்பதாலும் இருக்கலாம். வெள்ளி இரவு, அதைவிட சனிக்கிழமை இரவு தரும் குதூகலமே தனிதான்.
வழக்கத்தைவிடக் கொஞ்சம் உருக்கம் நிறைந்த இரவாகத் தோன்றியது. என்னைச் சுற்றி இருள் படர்ந்திருக்க, கொசுக்கள் பறந்துவந்து மோதிக்கொண்டேயிருந்தன. வானத்தின் கிழக்குப் பகுதியில் நட்சத்திரங்கள் களைப்பாக மின்னிக்கொண்டிருந்தன. மேற்கும் வடமேற்கும் கவலையுற்ற முகம்போல் இருண்டு கிடந்தன. கருத்தமேகத்தைக் காணுகையில் கொஞ்சம் மகிழ்ச்சி பூத்துவிடுகிறது.
மழை வருமா? என மனசு ஏங்கியது. கடைசியாய் எப்போது மழை வந்தது. நான்கைந்து மாதங்கள் இருக்கும். அப்போதும் குறிப்பிடத்தகுந்த மழையேதுமில்லை. முதல்நாள் ”சென்னையில் மழை கொட்டுகிறது” என நண்பர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்திருந்த செய்தியைப் பார்த்ததும் மனதில் பொறாமை பற்றியெரிந்தது. அதற்கு ஓரிருநாள் முன்பு மதுரையில் மழையென்று சொன்னது நம்பமுடியாமல் இருந்தது. அதேபோல் பெருந்துறையில் மழை வெளுத்துவாங்கியதென்று யாரோ சொன்னதையும் மனம் நம்பவே மாட்டேன் என அடம்பிடித்தது.
கடந்த ஆண்டு பெய்த மழை விசித்திரமாகவே இருந்தது. பேருந்து நிலையம் அருகே மழை கொட்டித் தீர்க்கிறது என்றபோது, நால்ரோட்டில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. திண்டல் கடக்கையில் தொப்பலாய் நனைந்தவர்களை பழையபாளையம் கடக்கையில் ஏன் இப்படி நனைந்து போகிறார்கள் என ஆச்சரித்தோடு பார்க்கும்வகையில் வஞ்சனை வைத்தே மழை பெய்கிறதோ எனவும் தோன்றியது.
கர்நாடகத்தில் மழையில்லை, காவிரி வரவேயில்லை, மேட்டூர் வற்றிய மடியாய்… விளைவு எங்கள் கிராமத்தில் குடிக்கும் தண்ணீருக்கும் ஆபத்து வரும் சூழல். எப்போதும் இந்தச்சமயத்தில் கரும்பும் மஞ்சளும் நிரம்பியிருக்கும் வயலெல்லாம் வறண்டே கிடக்கின்றன. இருக்கும் நிலத்தில் கால்வாசியோ அரைவாசியோ குறுகியகால சாகுபடிக்கு என கடலையோ, எள்ளோ, சோளமோ விதைக்கப்பட்டிருக்கின்றது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக அசராமல் இருந்த எங்கள் ஆழ்துளைக் குழாய் கிணறு இந்தாண்டு செயலிழந்துவிட்டது. விதைத்திருந்த கடலையைக் காப்பாற்ற வேண்டுமேயென புதிதாகப்போட்ட ஆழ்துளைக் குழாய் கிணற்றில் மண் மட்டும் நனைந்து வெளியேறியிருந்தது. வியாபாரியாக இருந்தால் வேறுவேறு கணக்குகள் போடலாம். விவசாயி வேறென்ன செய்யமுடியும்? மீண்டும் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டியதில் மோசம் என்று சொல்லமுடியாத அளவுக்கு தண்ணீர் வருகிறது.
வழக்கமாய் வஞ்சிக்கப்படும் கிராமங்களுக்கு, போனால் போகிறதென்று பிச்சைபோல் கொடுக்கும் கொஞ்ச நேர மின்சாரத்தில் நீர்பாய்ச்சி நெடுவயல் காணவேண்டிய நிலை. ஒரு நாளில் ஒரு ஏக்கர் பாய்ந்த நிலத்தில் நீர் பற்றாக்குறையாலும், மின்தட்டுப்பாட்டாலும் ஒவ்வொரு வயலாக நீர் பாய்ச்சி முடிக்க ஒருவாரம் ஆகின்றது. வாரமுடிவில் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.
பொங்கலுக்கு போனபோதும், போன வாரம் சென்றபோதும் அன்றைக்கென்று வழங்கப்படும் மின்சாரத்தில், இருக்கும் தண்ணீரைப் பாய்ச்ச மண்வெட்டியோடு கடலைக் காட்டிற்கு நான் போனேன். பல வருடங்களாகப் புழங்காவிடினும், நீச்சல்போல், பழகிவிட்டால் மறந்து போவதில்லை விவசாய வேலைகளும். இரண்டு முறையுமே முக்கால் மணிநேரம் வெட்டி மடைமாற்றியதற்கு உடம்பு ஒருவாரம் வலித்தது. இதெல்லாம் ஒரு காலத்தில் அனாயசமாகச் செய்த வேலை.
வெயிலில் வியர்த்துக் கொட்டியபோதும், ஒரு வாரமாக உடல் முறுக்கி வலித்தபோதும் தோன்றியது ”ஒரு மழை பெய்து தொலைக்கக்கூடாதா”!
இப்போதும் அதே தோன்றியது, ஒரு பெருமழை பெய்துவிட்டால், எல்லோருக்கும் ஒருவாரம் விடுதலை கிடைக்குமே. சும்மா கிடக்கும் நிலத்தில் கொஞ்சம் பச்சை பூக்குமே. அக்கம்பக்கத்து மாடு கன்று கொஞ்சம் ருசித்துப் பசியாறுமே.
பத்துமணிக்கு கொஞ்சம் காற்று குளிராய் ஆரம்பித்தது. சடசடவெனக் கொட்டத் துவங்கியது. படுக்கச் சென்றவன், கதவைத் திறந்து கொண்டு வாசலுக்கு வந்தேன். சாரலும் காற்றுமாய் துவங்கியிருந்தது மழை. பெரும் ஓசையோடு இன்றைக்கே எல்லாப் பஞ்சத்தையும் தகர்த்துவிடும் வேகத்தோடும், பெருமழைக்கான அடையாளத்தோடும் அடித்துப் பெய்யத் துவங்கியது.
முன்பொருமுறை இரவு 7 மணி சுமாருக்கு இதேபோல் கொட்டிய பேய் மழையொன்றில் நசியனூரிலிருந்து, ஈரோடு வரும் சாலையில் நகர்த்த முடியாமல் சாலையெங்கும் ஓரம்கட்டி நின்ற வாகனங்களோடு, ஓரமாய் ஒதுங்கி காரில் முடங்கிக் கிடந்தது நினைவிற்கு வந்தது. அன்றைக்கு மழைமீது கொண்ட பயத்திற்கு நிகரான நேசிப்பு இப்போது வந்தது.
மழைகுறித்த சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்ள உள்ளே ஓடினேன். மகள் உறங்கிக்கொண்டிருந்தாள். மனைவி வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து நிமிர்ந்து “செம மழைங்ளாங்க” என்றதோடு “உங்க செருப்ப எடுத்து வெச்சுட்டீங்ளா?” என்றும் கேட்டார்.
அக்டோபரில் என்று நினைக்கின்றேன். அப்போதுதான் அரிதாக கொஞ்ச அநியாயவிலை கொடுத்து ஒரு புதுச்செருப்பு வாங்கியிருந்தேன். கடையில் வாங்கும்போதே சொல்லிவிட்டார்கள் தண்ணி மட்டும் படாம பார்த்துக்குங்க என்று. நண்பர் வீட்டிலிருந்து வீடு திரும்ப புறப்பட்டபோது மழை தூறல் போட்டது. “தலை நனையாம போங்க” என்று ஒரு பிளாஸ்டிக் துணிக்கடைப் பையை கொடுத்து அனுப்பினார்கள். வீட்டிற்குப் போய்விடலாம் என விரைகையில் பெருவெள்ளமாய் பொழியத் துவங்கிட புதுச்செருப்பு குறித்த செருக்கு அதை பத்திரப்படுத்தச் சொன்னது. தலையில் இருந்த பையை எடுத்து அதில் செருப்பைப் போட்டு டேங்க் கவரில் பத்திரப்படுத்திக்கொண்டு. முழுக்க நனைந்த பின் முக்காடு ஏன் என, எங்கும் நிற்காமல் வீடு வந்து சேர்ந்தேன். பெய்த மழையைவிட கூடுதல் ஈரமாக வந்தவனை வீட்டிலிருப்போர் வித்தியாசமாகப் பார்க்கும் நேரத்திலா அந்தச் செருப்பை வேறு நான் வெளியில் எடுத்துப்போட்டிருக்க வேண்டும்? கண்ணாடி, பர்ஸ் என ஒவ்வொன்றாய் எடுத்து வைக்கும்போது ’ஆஹா செல்போனை எந்தப் பாக்கெட்டில் வைத்தோம்’ என யோசித்து இடதுபுற பின்பக்க பையில் பத்திரப்படுத்தியது நினைவுவந்து அதை அவரசமாய் எடுக்கும்போதுதான் கவனித்தேன் பேண்ட் பை முழுக்க தண்ணீர் தேங்கியிருப்பதை.
அக்குவேறு ஆணிவேராக கழட்டி உதறித்துடைத்தபின் அடுத்த இரண்டு நாட்கள் வரை பேட்டரியைப் போட்டாலே ஜன்னி வந்ததுபோல் வைப்ரேட்டர் மோடில் தானாகவே அதிர்ந்து, ஒரு கட்டத்தில் இவன் பொழைத்துப் போகட்டுமென தானாகவே அந்த செல்போன் தன்னை சரிசெய்து கொண்டது.
மழை அடித்து வாங்கிக்கொண்டிருந்தது. கையில் இருந்த செல்போனை ஒருமுறை வாஞ்சையாகப் பார்த்துக்கொண்டேன். செருப்பும் பத்திரமாகத்தான் இருந்தது.
இங்கு இந்த மழை இப்படிக் கொட்டி என்ன நிகழ்ந்துவிடப்போகிறது. தார்சாலைகளில் தழுவி சாக்கடைக்குப்போய், அக்கம்பக்கம் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளோடு தேங்கி, வீங்கி வெடித்து பெரும்பள்ளத்திற்குப் போய்… என்னத்தைச் சாதித்துவிடப்போகிறது நகரத்தில் பெய்யும் மழை.
இந்த வீதியில் பெய்து அடுத்த வீதியில் பொய்க்கும் இந்த மழை 25 கி.மீ தொலைவில் இருக்கும் எங்களூரில் பெய்துகொண்டிருக்குமா?. ஊரிலிருக்கும் தாத்தாவை அழைக்கலாமா என நினைத்தேன். கிராமத்தில் இது இரண்டாம் தூக்கத்திலிருக்கும் சாமம் எனத் தோன்றியது. ”அந்தப் பக்கமிருந்துதாங்க மழை வந்துச்சு, ஊர்லயும் பேஞ்சிருக்கும்” என்றார் மனைவி அவராகவே!
காலையில் எழுந்து கைபேசியில் ஃபேஸ்புக்கைப் பார்க்க எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர்ப்பெண் “ Its raining after 5 mnths... Thank GOD” எனத் தகவல் இட்டிருந்தார். நேரத்தைப் பார்த்தேன், இரவு 10 மணி எனக் காட்டியது. மனசில் மழை பெய்தது போலிருந்தது.
தாத்தாவிற்கு அழைத்தேன் “ஏ… சாமி” என்றார்
”தாத்தா அங்க மழை பரவாயில்லையா!?”
அது கொட்டு கொட்டுனு கொட்டீருச்சு, ரெண்டுமூனு ஒழவு மழையிருக்கும்”
மழைமேல் அளவிற்கரிய நேசம் மிகுந்தது.
அம்மாவிற்கு அழைத்தேன். மழைகுறித்த விசாரிப்புகளின் இறுதியில்
”மாசியில மழை பெய்யுமா?”
”ம்ம்ம்… பேயாம என்ன, மாசில மரம் தழையறதுக்குனு பேயுமே” என்றார்
இது மரம் தழைய மட்டும் பெய்த மழையல்ல. மனிதர்களின் மனசும் தழைய பெய்த மழையாகவேபட்டது. பெய்து அழித்தாலும், பெய்யாமல் ஒழித்தாலும், மழை எப்போதுமே ஒரு தர்ம நியாயத்தை தன்னோடு வைத்துக் கொண்டேதான் இருக்கின்றது. நேற்றைய மழையை எதனினும் அதிகமாக நேசிக்கத்துவங்கினேன்.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.