விதுர நீதி - ஞான தத்துவப் பொக்கிஷம்
எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியாது. 'எல்லாம் எனக்குத் தெரியும்' என்று நமக்கு நாமே பெருமை பாராட்டிக்கொண்டாலும், நமக்குத் தெரியாதவை கோடிக்கணக்கில் உண்டு. அதே நேரம், நாம் தெரிந்துகொண்டவற்றால் நம் வாழ்க்கைக்கு ஏதாவது பலன் உண்டா என்பதையும் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வெறும் தகவல் களஞ்சியங்களாக இருப்பதில் என்ன பலன்?உலகத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் கணினியில் (கம்ப்யூட்டரில்) இருக்கின்றன. அதனால் அந்தக் கணினிக்கு ஏதாவது பலன் உண்டா? இல்லையே!
ஆனால், ஒரு விஷயத்தில் கணினி ஒழுங்காக இருக்கிறது. ஒரு தட்டு தட்டினால், எதைக் கேட்டாலும் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறது. 'எனக்குத்தான் எல்லாம் தெரியும்' என்று குதிப்பதில்லை. ஆனால்... 'நான் நடமாடும் தகவல் களஞ்சியமாக்கும்!' (மொபைல் என்ஸைக்ளோபீடியா) என்று தற்பெருமை பேசிக்கொள்ளும் நாமோ உணர்ச்சிக்குவியல்களாக, ஆசை, வெறுப்பு, கோபம், குழப்பம் ஆகியவற்றின் களஞ்சியங்களாக இருக்கிறோம்; அமைதியின்றித் தவிக்கிறோம். ஏன் இப்படி?
இதற்கான காரணத்தை, நமது முன்னோர்கள் பலவிதங்களிலும் சொல்லி இருக்கிறார்கள். அதுவும்... எளிமையாக, மிகவும் அழகாகக் கதை வடிவில் சொல்லி இருக்கிறார்கள். அவற்றில் ஒன்று இது; ஆழமான தத்துவத்தைச் சொல்லக்கூடிய இதை எழுதியவர் யார் என்பதை பார்க்கும்முன், கதையைப் பார்ப்போமே! கதை முடியும் வரை, எந்தவிதமான ஆராய்ச்சியும் வேண்டாம். இதோ கதை...
ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான்.
அப்போது மிகவும் கோரமான- அவலட்சணமான- யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் 'தடக் தடக்' என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது.
''அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்!'' என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே... அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.
அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க... 'கரக்... கரக்...' என்று சத்தம் கேட்டது. பார்த்தால்... அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன.
இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்... உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்... அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான்.
'என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது!' என்றுதானே நினைக்கிறீர்கள்? அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்!
கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.
கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள்- பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம்.
அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம்.
ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம்.
கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன்.
மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள்- நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்த்தோமே... அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும்.
மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு- வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ் நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.
தேன் துளிகள் என்பது பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்துவிடுகிறோம். அதாவது... தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பிவிட்டதாக நினைத்து, சின்னஞ்சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம்.
கதை வடிவாகச் சொல்லி இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது, விதுர நீதி. நீதி நூல்கள் பல இருந்தாலும், அவற்றில் முதலிடம் பிடித்திருப்பது விதுர நீதிதான். அந்த அளவுக்கு மிகவும் உயர்ந்ததான நீதி நூல் இது.
விதுரர், திருதராஷ்டிரனுக்குச் சொன்ன ஞான தத்துவப் பொக்கிஷம் இது. பாரத நாட்டின் பழம்பெரும் பொக்கிஷமாகவே இதை அயல்நாட்டுக்காரர்கள் மதிக்கிறார்கள்.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.