ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமரரும்பு கமடம் இதென்று
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து
ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவினிலிருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே
உயர்தரு ஞான குரு உபதேசம்
முத்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து
மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில்போல் அவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே
வருவது போவது ஒருமுதுகூனும்
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து
கடன்முறை பேசும் என உரைநாவும்
உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே
வளைபிறை போல எயிரும் உரோமம்
முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து
வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்திள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி அழல் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே…..
-பட்டினத்தார்
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.