ஸ்ரீரங்க ராயர், வெங்கட ராயர் போன்றவர்களுக்குப் பின்னர், நாயக்க வம்சத்தைச்
சேர்ந்த திருமலை ராயன், வீரப்ப நாயகன் போன்றவர்களும் பெருமளவில் சிதம்பரம்
கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். சேர நாட்டை ஆண்டு
வந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில்
ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். ஆனால் இவர் காலத்தில் சற்றே குழப்பம்
ஏற்படுகின்றது. சேர நாட்டின் கொல்லம் ஆண்டை ஒட்டி இவர் 9-ம் நூற்றாண்டு என்று
சொல்லப் படுகின்றது. ஆனால் இவரும், சுந்தரரும் சமகாலத்தவர்.
//சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள், சுந்தரர்
இருவரும் பாண்டிய நாடடைந்தபோது பாண்டிய மன்னனும், சோழனும் வரவேற்றனர்.
கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு, சேரமான் பெரு மாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து
கி.பி. 825-க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும்
மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி.பி.
670-710).// ஆகவே இவர் காலம் 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியும், 8-ம்
நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம். இவர் எழுதிய "திருக்கைலாய ஞான உலா"
திருக்கைலையிலேயே ஈசன் முன்னால் அரங்கேற்றப் பட்டுப் பின்னர் மாசாத்துவான்
என்பவரால் திருப்பிடவூரில் அரங்கேற்றப் பட்டது என்று சொல்வதுண்டு. பாடல் பக்கம்
திறக்க முடியவில்லை. :( பின்னர் கேரளத்தின் கொச்சியில் ஆண்டு வந்த மகாராஜா
ராமவர்மனாலும் கட்டளை மேற்கொள்ளப் பட்டு "கொண்டமநாயகன் கட்டளை" என்ற பெயரால்
நிறைவேற்றப் பட்டது எனவும் அறிகின்றோம்.
இப்போது பதினெட்டாம் நூற்றாண்டின் காலங்களில் செய்யப் பட்ட திருப்பணிகள்:
காஞ்சியைச் சேர்ந்த பச்சையப்ப முதலியாரால், கோயிலின் திருவிழாக்களில்
முக்கியமான பிரம்மோற்சவம் முறைப்படுத்தப் பட்டதோடு அல்லாமல், திருவாதிரைத்
திருநாளைப் போன்ற முக்கியத்துவம், ஆனித் திருமஞ்சனத்துக்கும் அளிக்கப் பட்டுப்
பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது. நடராஜரின் ரதம்
இருக்கும் பீடம் உள்பட, ரதங்களையும் மராமத்து செய்து, கிழக்குக் கோபுரத்தின்
திருப்பணியையும் ஏற்றுச் செய்ய ஆரம்பித்தார் பச்சையப்ப முதலியார். அது பூர்த்தி
அடைவதற்குள் இறந்து போகவே, அவரின் மனைவியும், சகோதரியும் சேர்ந்து அவர் ஆவலைப்
பூர்த்தி செய்தனர். இவரின் தூண்டுதலின் பேரில் மணலியில் வாழ்ந்து வந்த சின்னையா
முதலியாரும் சிதம்பரம் கோயிலுக்கு நந்தவனங்களைச் செப்பனிடுதல், மற்றும்
கோயிலின் பல திருப்பணிகள், எல்லாவற்றுக்கும் மேல் சித்சபையின் படிக்கட்டுகளை
வெள்ளியால் அமைத்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்தார்.
நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச்
சேர்ந்தவர்களாலும் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப்
பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார், அவரின்
சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும், நாலு கோபுரங்களின்
திருப்பணிகள், கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல், சுற்றுச் சுவர்களைச்
செப்பனிடுதல், பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல், சிவகங்கைக் குளத்துப்
படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல், திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச்
செய்து அளித்தல், விளக்குகள், பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல்
போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து
வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891-ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட
64 வருடங்கள் சென்ற பின்னரே 1955-ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும், திரு
ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப் பட்டதாயும் தெரிய
வருகின்றது.
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.