ரிக்க்ஷாகாரனையும் படிக்க வைத்த பெருமைக்குரியவர்
.சி. ப ஆத்திதனார் அவர்களாகும். கவனத்தை ஈர்க்கும் தலைப்புகள், செய்திகளை
எவ்வாறு சுவையாகத் தருதல், எத்தகைய செய்திகள் பாமரனுக்குத் தேவை
என்றநோக்கங்களைக் கொண்டு அவைகளுக்குத் தனிப் பயிற்சியும் கொடுத்தவர்.
பின்னர்தாம் மாணவர்களுக்கு பயிற்சி விகடனில் தொடங்கப் பட்டது
எஸ் எஸ்.வாசன் அவர்கள் தன் விருப்பங்களைப் புகுத்தி வாசகர்களைப் படிக்க
வைத்தவர். சகலகலா வல்லவர். பெரும் சாதனையாளர். விமர்சனங்களை ரசிக்கும்
படி செய்தது விகடன்.
பொருத்தமான எழுத்தாளர்களைக் கொண்டு எழுத வைத்தவர். விகடன் பல புகழ்பெற்ற
எழுத்தாளர்களுக்குத் தாய்வீடு. கல்கியின் விமர்சனங்கள் பேசப் பட்டன. அந்த
அனுபவப்பட்டறையிலிலிடுந்து வெளியேறி கல்கி பத்திரிகை தொடங்கி இன்றும்
தனக்கு நிகர் யாருமில்லாத அளவு சுவையான பல படைப்புகளைத்
தந்திருக்கின்றார்.
பொன்னியின் செல்வனைப் படம் பிடிக்க பலர் முயன்றனர். முடியவில்லை. ஆனால்
மாஜிக் லாண்டர்ன் , குமரவேல் உதவியுடன் நாடகமாக்கி சென்னையில்
நடத்தினர். அந்த நாடகத்திற்கு கமல், ரஜனி இருவரும் வந்து, உட்கார்ந்து
முழுமையாக நாடகம் பார்த்தனர். நாடகம் முடியவும் கமல் அரங்கத்திற்குப்
பின் சென்று நடிகர்களை பாராட்டி பேசினார். அப்பொழுது அவர் சொன்ன ஒன்றை
உங்களுக்குக் கூற விரும்புகின்றேன்.
“என்ன டிக்கெட்டே கிடைக்கல்லியாமே. அக்ரஹாரத்து மாமிகள் மூணு நாளும்
தொடர்ந்து வந்திருப்பா. கல்கி கிறுக்குகள் “
மறுக்க முடியாத உண்மை. அடுப்பங்கரை வரை பத்திரிகைகள் போனது விகடன்
ஆரம்பித்து வைத்த சாதனை. இப்பொழுது
அடுப்பங்கரையும் மறக்க வைத்துக் கொண்டிருக்கின்றது தொலைக்காட்சி
சீரியல்கள்.
அடுத்துவந்த தேவன் இன்னொரு பாணியில் சென்றார். நகைச் சுவைப்
படைப்புகள். கல்கி விமர்சனங்களில் குறும்பும், நகைச்சுவையும் இருக்கும்.
விகடனின் முத்திரையே சிரிப்பு முகம்.
விசிறி வாழை எழுதிய அதே சாவி வாஷிங்டன் திருமணம் படைத்து
உலகில் வாழும் தமிழ் மக்களை சிரிக்க வைத்தார். அதில் மயங்கிய
அமெரிக்காவாழ் தமிழ் மக்கள் விடுத்த அழைப்பில் சாவி போக முடியாததும்
மணியன் போனதும் நடந்தவைகள். சாவிக்காக வருந்தினாலும் பயணக் கட்டுரை எழுத
ஒரு புதியவனைத் தோற்றுவித்துவிட்டது கொஞ்சம் சமாதானம். தெற்கு
வளர்கிறதின் மூலம் சமுதாயப் பணிகளையும் பத்திரிகையில் படம் பிடித்துக்
காட்டப்பட்டன. குறள் கதைகளால் வாழ்க்கையின் சிறப்பு சொல்லப்பட்டது.
. அன்று பென்களுக்கு, டாக்டர் லட்சுமியின் கதைகள் விருப்பமானது..
சிந்தனைக்கு ஜெயகாந்தன், சுஜாதாவின் ஜீனோ, சிவசங்கரியில் பல கதைகள்,
இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள், சொல்லிக் கொண்டே போகலாம்.
அதுவே ஒரு நீண்ட தொடராகிவிடும். என் நோக்கம் வேறு. வாசன் அவர்கள்
பல்நோக்கில் வாசகர்களை இட்டுச் சென்றார் என்பது உண்மை.
எங்களைப்போல் ஆரம்ப நிலையில் இருந்தவர்களுக்குப் பிரசண்ட விகடன் நுழை
வாயில் என்றால் விகடன் எங்கள் இலக்கு. கதைகளுக்கு சன்மானம் கொடுத்து
வந்தது சில பத்திரிகைகள் தான்.
ஒரு வேலையைக் கையில் வைத்துக் கொண்டு எழுதுகின்றவர்கள் இப்பொழுது அதிகம்.
அக்காலத்தில் எழுத்தை நம்பி இருந்தவர்கள் பலர். ஒரு கதைக்கு 15 ரூபாய்
கிடைக்கும். விகடனில்தான் அதிகம் கொடுத்தார்கள் அதுவும் முத்திரைக்
கதைக்கு 101 ரூபாய். ஒரு கதை முத்திரை பெற்று விட்டால் போதும்,
எழுதியவனுக்கு மலர்ச் கிரீடம் சூட்டப்பட்டது போல் மகிழ்ச்சி ஏற்படும்.
. மணியன் விகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது ஆரம்பித்தார். குங்குமம்,
சாவி பத்திரிகைகளும் அந்தக் காலத்தை ஒட்டி வெளியாகி இருந்தன. ஒரு நாள்
குங்குமம் அலுவலகம் சென்றிருந்தேன். முரசொலி மாறனுக்கு என் நண்பர்கள்
வட்டம் தெரியும். அதிலும் மணியன் என் குடும்ப நண்பர் என்றும் தெரியும்.
அப்பொழுது அவர் என்னிடம் சொன்னது. “ எனக்கு போட்டி இதயம் பேசுகிறது, சாவி
யல்ல. விகடனும், குமுதமும் என் இலக்கு. “ என்றார்.
அடுத்து எஸ்.ஏ. பி. அவர்கள். வாரப் பத்திரிகையும் பாமரரைப் படிக்க
வைத்தவர். தமிழகத்தில் அதிக லட்சங்களில் விற்பனையான வாரப் பத்திரிகை
குமுதம். அவருக்கு ஒரு சிறந்த படை அமைந்தது.
ரா.கி. ரங்கராஜன், ஜ. ரா சுந்தரேசன், புனிதன், அரசியல் நிருபர் பால்யூ
இன்னும் சிலர். ஒவ்வொரு இதழும் ஒரு துணை ஆசிரியரின் பொறுப்பு.
வாரம்தோறும் கூட்டம் போட்டு விவாதிப்பார். வாசகர்கள் கடிதங்கள்,
விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் விவாதிக்கப் படும். குறை கண்டால் உடனே
மாற்றிவிடுவார். அதில் வரும் ஒவ்வொரு எழுத்தும் அவர் பார்வையில் தப்பாது.
சரியான பத்திரிகை வியாபாரி. சாண்டில்யன் குமுதத்தின் சமஸ்தான வித்துவான்.
அவர் கதையில்
சிருங்கார ரசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். விமர்சிப்பவர்கள் கூடப்
படிப்பார்கள். அவர் தொடர் ஆரம்பித்தால் ஒரு லட்சம் விற்பனையில்
கூடும்.லதாவின் குண்டுக் கண்கள் பெண்களும்
அவர் கதைகளுக்குத் துணையாக இருந்தன.
இந்த மூவர் பத்திரிகை உலகின் ஜாம்பவான்கள். எனவே இவர்களைப் பற்றி
மட்டும் எழுதினேன். பத்திரிகை வரலாறு என்றால் ஏனைய பத்திரிகைகளையும்
எழுதப் பட்டிருக்க வேண்டும்.அது என் நோக்கமும் அல்ல/ ஆனாலும் என்
பயணத்தில் பல பத்திரிகைகள் எட்டிப் பார்ப்பார்க்கும்.
வாழ்க்கை மாறுதல்களுக்கேற்ப எழுத்துக்களும் அமையும். பழையன கழிதலும் ,
புதியன புகுதலும் நம் இலக்கணம் கூறியதே
அச்சம் மடம், நாணம் பயிர்ப்பு நான்கும் பெண்ணின் குணங்கள்.
இது நமது இலக்கணம். அவைகளை நாய்க்குத் துக்கி எரியச் சொன்னது பாரதி.
பக்கத்தில் பத்தினிப் பெண் கேட்டான் பாரதி.
கோரிக்கையற்று கிடக்கும் வேரில் பழுத்தபலா கண்டு இரங்கினான் அவன் தாசன்.
காலஓட்டத்தின் மாற்றம். இப்பொழுது இலக்கணக் குணன்களுடன் இருந்தால்
சென்னையில் டவுன்பஸ்ஸில் பெண் போக முடியுமா? எத்தனை உரசல், இடியல்.
விண்ணிலே பறந்த கந்தர்வனை ரசித்ததற்காக பரசுராமனின் தாய் ரேணுக்கவின் தலை
துண்டிக்கப்பட்டது. அந்த இலக்கணப்படி என்றால் இக்காலத்தில் தலையில்லா
முண்டங்கள் நிறைய உலாவும். சினிமா நடிகர்களை ரசிக்கும் பெண்களின் கதி
அப்படி ஆகி இருக்கும். மாற்றங்கள் முதலில் பிடிக்காது. அதுவே பழகி
விட்டால் அது புதுக் கலாச்சாரமாகிவிடும். உலகம் எப்பொழுதும் போல்தான்
சுழன்று கொண்டிருக்கின்றது. ஆனால் மனிதனின் பழக்க வழக்கங்கள் மிகவும்
வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த வேகத்தில் பழமைவாதிகள்
தள்ளாடுகின்றோம். வருந்துகின்றோம்
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.